பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடைபெறும் குருபூஜையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த ஆண்டு பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக சென்னையிலேயே தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, நந்தனம் சிக்னல் அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவர் சிலைகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று தேவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.