தமிழ்நாடு முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் தக்க வைத்துக்கொண்டார்.
விஜய்யின் பெரம்பூர் தொகுதி வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி. சேகர், வாக்காளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி. மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகினர்.
விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தனியாக மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார். வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, வரும் 25-ம் தேதிக்கு வழக்குகளை ஒத்திவைத்தார். அதற்குள் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் உரிய மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அவகாசம் வழங்கினார்.
இதற்கிடையே, வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர். சிவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையையும் வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், விஜய்யின் பெரம்பூர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று தேர்தல் வழக்குகள், திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஆகியவை வரும் 25-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.