போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, தாங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் இருப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம் என மாணவர்கள் உறுதியேற்றனர்.
மேலும், போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டு நல்வழிப்படுத்துவதில் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என்றும், போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசுக்கு துணை நிற்போம் என்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் வந்தபோது, மாணவ, மாணவிகள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் உற்சாகமாக வரவேற்றனர். மேடைக்கு வந்த விஜய், உறுதிமொழியை வாசிப்பதற்கு முன்பு மாணவர்களைப் பார்த்து “குட்மார்னிங். அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை அவர் வாசித்தார். அதில்,
" போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை, நான் முழுமையாக அறிவேன் நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை போதை பழக்கத்திற்கு மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம்
போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்ப்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று முன்மொழிய மாணவ, மாணவிகள் அதைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் முதலமைச்சர் விஜய் நேரடியாக விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி அதிகாரிகளைப் பாராட்டினார். இதையடுத்து, விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகிகளுடன் மேடைக்கு சென்று முதலமைச்சர் விஜய்யுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.