தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்த பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மக்கள் அணியாகக் களம் கண்டது. 1967 மற்றும் 1977-ஆம் ஆண்டுத் தேர்தல்களைப் போலவே, இதுவும் சாமானிய மக்களுக்கான அரசையே உருவாக்கும் என்று நாங்கள் உறுதியாகக் கூறினோம்.
மக்கள் எங்களைத் தனிப்பெரும் கட்சியாகச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். நூலிழையில் தனிப்பெரும்பான்மை தவறிப்போனதால், எங்களைச் சிறுபான்மை அரசு என்று குறிப்பிட்டாலும் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஏனெனில், இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் அரசு.
இது குதிரை பேரம் நடத்தும் அரசு அல்ல, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு. எங்களது அரசு பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அரசாகத் திகழும். கொள்கைத் தலைவர்களின் வழியைப் பின்பற்றி, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சாதி-மதப் பாகுபாடற்ற ஒரு மனசாட்சியுள்ள மக்களாட்சி முறையை நாங்கள் நிலைநாட்டுவோம்.
இது பதவிக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ அமைக்கப்பட்ட அரசு அல்ல; மாறாக மக்களுக்காகத் துணிச்சலுடன் செயல்பட உருவான அரசு" என்று அவர் தெரிவித்தார்.