தமிழ்நாடு

தீபாவளி நாளில் மழை வருமா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த LATEST UPDATE!

By Christon
07 Nov 2026, 03:35 PM
தமிழ்நாட்டில் தீபாவளி தினமான நாளை (நவ.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகை நாளன்று (நவ.8) தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று (நவ.7) மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தீபாவளி தினமான நாளை (நவ.8), தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.