தமிழ்நாடு

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!

By Christon
15 Jul 2026, 04:33 PM
பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள, சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், கடந்த ஜூன் மாதம் இரு தனிநபர்களின் பெயரில் வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆவணங்களில் இது கோவில் நிலம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும், நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நிலம் தனிநபர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அறநிலையத்துறை அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் விதிமீறல்கள் உறுதியானதைத் தொடர்ந்து, பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலப் பறிமாற்றத்தில் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதா, அரசு அதிகாரிகளுக்கும் தனிநபர்களுக்கும் இடையே கூட்டுச் சதி உள்ளதா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவில் சொத்து பாதுகாப்பு மற்றும் வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தைச் சிறப்புப் பிரிவான சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இந்த மோசடி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிச் சிபிசிஐடி போலீசார் தங்களது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.