சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என தெரிவித்துள்ளது.
பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரிவினோத் சூர்யாகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும் பேச்சுரிமை கருத்தரிமை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி, கோவில் நில நிர்வாகத்தில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் பொது நலனுக்குப் பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும், அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது பொறுந்துமா? அவதூறு வழக்கு தானே தொடர முடியும், இதை தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரியாஷிடம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த வழக்கு எனக்கூறி காவல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.