தமிழ்நாடு

“தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச்செயலா?”- சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

By Christon
14 Aug 2026, 03:26 PM
தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோவையில் தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் காவல்துறைக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்த அனுமதி கோரி பாஜக கோவை மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி வாதிடுகையில், "பேரணி கேட்கப்பட்ட பகுதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் நிறைந்த குறுகிய பிரதான சாலை என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. மாற்று வழியில் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதிக்கும் 12 இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்தால் அனுமதி வழங்கத் தயாராக உள்ளோம்" என்று விளக்கமளித்தார்.

காவல்துறையின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, "சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடியே உயிரைத் துறந்த நாட்டில், தேசியக் கொடியைப் பிடித்துச் செல்லத் தடை விதிப்பது ஏன்? அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி கேட்பதில் என்ன பிரச்சனை உள்ளது? தேசியக் கொடியை ஏந்திச் செல்வது என்ன பாவச்செயலா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "பாஜகவுக்கு அனுமதி கிடையாது என்றால் தவெகவுக்கு மட்டும் அனுமதியா? பேரணி நடத்த அனுமதி கோரப்பட்ட கோவை என்ன பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ளதா? நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளைப் பின்பற்றி மாவட்ட ஆட்சியரோ காவல்துறையோ செயல்படக் கூடாது" என்றும் சுட்டிக்காட்டினார்.

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அனுமதிக்கப்பட்ட மாற்று இடங்களில் பேரணியை நடத்துவது தொடர்பாக பாஜக தரப்பினர் காவல்துறையுடன் உடனடியாகக் கலந்தாலோசித்துத் தங்களின் முடிவைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.