தமிழ்நாடு

"குடை எடுத்துட்டு வெளியே போங்க.." 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
09 Nov 2026, 07:28 AM
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், சுமார் 0.9 கி மீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை, தென் தமிழகம், தெற்கு கேரளா மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இந்த நிலையில், இன்று (நவ.9) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (நவ.10): தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.