தமிழ்நாடு

வேறு பெண்ணுடன் தொடர்பு என்பது கொடுமையாகாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

By Christon
23 Oct 2026, 05:32 PM
கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே சட்டப்படி மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்ற தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. கணவர் குடும்பத்தைக் கவனிக்காமல் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மனமுடைந்த மனைவி தன் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கீழ் நீதிமன்றம் அவரைக் கணவரை விடுதலை செய்தது.

கீழ் நீதிமன்றத்தின் இந்த விடுதலையை எதிர்த்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வரதட்சணைக் கொடுமை மற்றும் திருமணத்தை மீறிய உறவு குறித்துத் தாங்கள் அளித்த சாட்சியங்களைக் கீழ் நீதிமன்றம் சரியாகப் பரிசீலிக்கவில்லை என்பதால் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. மறுபுறம், வரதட்சணை கொடுமை அல்லது திருமணத்தை மீறிய உறவு குற்றச்சாட்டுகளைக் காவல்துறை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்பதாலேயே கீழ் நீதிமன்றம் விடுதலை செய்ததாகக் கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த ஆரம்பக்கட்ட புகாரில் திருமணத்தை மீறிய உறவு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வரதட்சணைக் கொடுமை குறித்து எங்குமே கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். வரதட்சணைக் குற்றச்சாட்டுப் பின்னரே சாட்சிகள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளதையும் கீழ் நீதிமன்றம் சரியாக உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

மேலும், கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A-ன் கீழ் மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அரசுத் தரப்பு தன் குற்றச்சாட்டை முறையாக நிரூபிக்கவில்லை என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.