தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 50 இடங்களில் குடிநீர் ATM

By Jayakumar
18 Jun 2025, 05:14 PM
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

50 இடங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்:

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (Water Dispensing Unit) நிறுவி பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில், தேர்தெடுக்கப்பட்ட இடங்களா பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், வணிக பகுதிகள், ரயில் நிலையங்கள், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை என 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரங்களை 3 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிப்பதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

தானியங்கி இயந்திரங்கள் பராமரிப்பு:

தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன IOT (Internet of Things) மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறையை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் குடிநீர் அளவு குறையும் போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தபடுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.