தமிழ்நாடு

பயணிகள் கவனத்திற்கு.. பேருந்துகளில் ரீல்ஸ் பார்க்கக்கூடாது.. தமிழக அரசு அதிரடி!

By Christon
28 Jul 2026, 10:50 AM
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஸ்பீக்கரில் பாடல்கள் கேட்பதற்கும் உரத்த குரலில் பேசுவதற்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய பயண நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில், குறிப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது பலர் உரத்த ஒலியுடன் 'ரீல்ஸ்' பார்ப்பதும், போனில் சத்தமாகப் பேசுவதும் சக பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் பயணிகள் அனைவரும் ஹெட்போன் (Headphone) அல்லது இயர்போன் (Earphone) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போனில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் அனைத்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். மோட்டார் வாகன ஒழுங்குமுறை விதிகளின்படி, பேருந்தில் உரத்த ஒலி இசைக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பயணம் முழுவதும் போனில் சத்தமாகப் பேசுவது மற்றும் ஸ்பீக்கரைப் பயன்படுத்துவது முறைகேடான செயலாகக் கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் குறித்துப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து அரசுப் பேருந்துகளின் உட்புறத்திலும் தெளிவாகத் தெரியும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் (Stickers) ஒட்டுமாறு ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.