ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இன்று தனது சொந்த மண்ணில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. லக்னோ அணி கடந்த மூன்று போட்டிகளில் வரிசையாகத் தோல்வியைத் தழுவியுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம், தொடர் வெற்றிகளுடன் சீசன் தொடங்கி, கடந்த இரண்டு போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்த ராஜஸ்தான் அணியும் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.
லக்னோவின் பலமும் பலவீனமும்
லக்னோ அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசை இன்னும் நிலையற்றதாகவே உள்ளது. மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்தாலும், நட்சத்திர வீரர் நிகோலஸ் பூரன் ஃபார்ம் அவுட்டில் இருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிரின்ஸ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். சரியான 'ஆடும் லெவன்' அணியைத் தேர்வு செய்வதிலேயே லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது தடுமாறி வருகிறார்.
ராஜஸ்தானின் அதிரடி பேட்டிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி (246 ரன்கள்) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இருப்பினும், மிடில் ஆர்டர் பேட்டிங் அந்த அணிக்குப் பலவீனமாக உள்ளது. பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். இரு அணிகளும் இதுவரை மோதிய 6 போட்டிகளில், ராஜஸ்தான் 4 முறையும், லக்னோ 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.