விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறாரா ரோகித் சர்மா? அதிர்ச்சி தகவல்!

By Christon
17 Jul 2026, 03:58 PM
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மாவின் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கனவு நனவாகாமல் போகும் சூழல் உருவாகியுள்ளதால், அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் ரோகித் சர்மா தனது உடற்தகுதியைத் தீவிரமாக மேம்படுத்தி வந்தார். இந்நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக்குழுவின் 2027 உலகக் கோப்பைக்கான எதிர்காலத் திட்டங்களில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்றும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்வுக்குழுவின் இந்த முடிவால் பெரும் ஏமாற்றமடைந்த ரோகித் சர்மா, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரின் போது பிசிசிஐ-யின் (BCCI) சில உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்குச் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மேலும் அதிருப்தியடைந்த ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியே இந்திய அணிக்காக அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது. நீண்ட காலமாக இந்திய அணியின் தூணாக விளங்கிய ரோகித் சர்மாவின் இந்த திடீர் ஓய்வு குறித்த தகவல் கிரிக்கெட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.