வரவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே அணிகள் தங்களின் பலத்தை அதிகரிக்க வீரர்களை டிரேட் (Trade) செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே டெல்லி, ஐதராபாத், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் முக்கிய வீரர்களை மாற்றி அதிரடி காட்டிய நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வீரர்களை மாற்ற முயலும் இரு அணிகள்
கடந்த சீசனில் லக்னோ அணிக்கு பேட்டிங் பலவீனமாகவும், பந்துவீச்சு பலமாகவும் இருந்தது. மாறாக, ராஜஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருந்தபோதிலும், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இணையான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இந்த பலவீனங்களைச் சரிசெய்யும் வகையில், ராஜஸ்தான் அணியிலிருந்து ஒரு வேகப்பந்துவீச்சாளரும் ஆல்ரவுண்டரும் லக்னோவிற்கும், லக்னோவிலிருந்து ஒரு பேட்ஸ்மேன் ராஜஸ்தான் அணிக்கும் மாறவுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய நட்சத்திரங்கள்
லக்னோ அணி தனது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான மயங்க் யாதவ் அல்லது பிரின்ஸ் யாதவ் ஆகியோரில் ஒருவரை அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், ராஜஸ்தான் அணி சாம் கரண் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகிய இருவரையும் டிரேட் செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அறிவிப்பு
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை லக்னோ விட்டுக்கொடுக்குமா என்ற சந்தேகம் நீடித்தாலும், இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் இந்த டிரேட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.