ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் பரபரப்பான 'எலிமினேட்டர்' நாக்-அவுட் ஆட்டம் இன்று (மே 27) இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லீக் சுற்றுகளின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இன்று நடைபெறும் நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெறும் அணி, நேற்று தகுதிச் சுற்று 1-இல் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் மோதும். இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு நேரடியாக வெளியேறும் என்பதால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போராட்டமாகும்.
அசுர ஃபார்மில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
தொடரின் பாதியில் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் திரும்பியது ஹைதராபாத் அணிக்குப் பெரும் பலமாக மாறியுள்ளது. அவர் தலைமையில் விளையாடிய கடைசி 7 போட்டிகளில் 5-இல் அந்த அணி வென்றுள்ளது. லீக் சுற்றில் ராஜஸ்தானை இரண்டு முறை வீழ்த்திய நம்பிக்கையுடன் ஹைதராபாத் களம் காண்கிறது. பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசன் (606 ரன்கள்), இஷான் கிஷன் (569 ரன்கள்), அபிஷேக் சர்மா (563 ரன்கள்) மற்றும் டிராவிஸ் ஹெட் (393 ரன்கள்) என அசுர பலத்துடன் உள்ளனர். பந்துவீச்சில் இஷான் மலிங்கா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நெருக்கடியைச் சமாளிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி, தொடர் வெற்றிகளுக்குப் பின் சில சரிவுகளைச் சந்தித்தாலும், கடைசி 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங்கில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (583 ரன்கள்), துருவ் ஜூரெல் (458 ரன்கள்) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (397 ரன்கள்) ஆகியோர் தூணாக விளங்குகிறார்கள். பந்துவீச்சில் 21 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் முதன்மை பலமாக இருக்கிறார். அவருடன் நந்த்ரே பர்கர் மற்றும் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் யாஷ் ராஜ் பூனியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
ரன் குவிப்பு மைதானம்
இன்றைய போட்டி நடைபெறும் முலான்பூர் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது. இந்த சீசனில் இங்கு நடந்த லீக் போட்டிகளில் 220-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாகப் பஞ்சாப் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இன்றைய நாக்-அவுட் போட்டியிலும் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.