ஜுனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (நவம்பர் 14) மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த முறை பதிலடி கொடுத்து கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணியும் தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 8 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, 9-வது முறையாகக் கோப்பையை வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டி, ஓமன் நாட்டின் அல் அமரத் பகுதியில் உள்ள அமரத் கிரிக்கெட் மைதானத்தில் (Ministry Turf 2) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.
இந்திய அணியில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யவீர் சேவாக் இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 4 போட்டிகளில் 303 ரன்கள் குவித்துள்ள அவர், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார். 101 ரன்கள் சராசரியுடன் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் இஷான் சூட் 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மேலும், கேப்டன் லக்ஷ்யா ராய்ச்சந்தானி, விக்கெட் கீப்பர் அன்வய் டிராவிட், அர்ஜுன் ராஜ்புத், வி.கே. வினீத் ஆகியோரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் கேப்டன் லக்ஷ்யா 93 ரன்களும், வினீத் அரைசதமும் அடித்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜுன் ராஜ்புத் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் பலம் என்ன?
பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் 238 ரன்களுடன் சிறந்த பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ரிஸ்வானுல்லா 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்த ஹம்சா ஜஹூரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சய்யம் 8 விக்கெட்டுகளையும், அலி ரஸா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு வலுசேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டித் தோல்விக்குப் பதிலடி கொடுத்து இந்தியா 9-வது முறையாகக் கோப்பையை வெல்லுமா? அல்லது பாகிஸ்தான் மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இறுதிப்போட்டிக்காகக் காத்திருக்கின்றனர்.