அரசியல்

"பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை"- முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

By Christon
31 Oct 2025, 11:25 AM
"உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகின்றனர்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஊழலை மறைக்க முயற்சி

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தி.மு.க.-வின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது தி.மு.க.-வின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

பிரதமர் சொன்னது உண்மை

உழைக்கும் பீகார் மக்களைத் தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.

தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி தி.மு.க. நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போலப் பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பாரதப் பிரதமர் தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

முதல்வர் பதவிக்கே அவமானம்

எப்படி, தி.மு.க.வினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் தி.மு.க.-வினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க. ஸ்டாலின் வகிக்கும் முதல்வர் பதவிக்கே அவமானம்.

தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.