2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும், அரசியல் அரங்கில் பரபரப்பான சூழல் நீடித்து வருகிறது. முக்கியக் கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்தச் சூழலில், காலி ஏற்பட்டுள்ள அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு (அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால்) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்கத் தவெக திட்டம்
தற்போது தவெக கூட்டணிக்குச் சட்டமன்றத்தில் 107 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தடையில்லா ஆதரவு தவெக அரசுக்கு இருக்கும் நிலையில், இந்த 5 இடைத்தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றினால் அக்கட்சியின் பலம் 112 ஆக உயரும். இதன் மூலம் 5 ஆண்டு கால ஆட்சியை எவ்விதச் சிக்கலுமின்றி முழுமையாகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதால், தவெக இந்த இடைத்தேர்தலில் களம் காணத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
திமுகவின் வியூகமும் அதிமுகவின் தயக்கமும்
மறுபுறம், தங்களது அரசியல் வலிமையை நிரூபிக்க இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானது என்று திமுக கருதுகிறது. இதற்காகக் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டு வரும் திமுக தலைமை, பலமான வேட்பாளர்களைக் களம் இறக்கத் தயாராகி வருகிறது.
ஆனால், தொடர் தோல்விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் தவித்து வரும் அதிமுக தலைமை, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்ற கடுமையான குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. மீண்டும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கட்சியில் மேலும் பிளவு உண்டாகுமோ என்ற அச்சத்தில் அதிமுக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு இடைத்தேர்தல்களிலும் திமுக - நாம் தமிழர் கட்சி இடையே தான் போட்டி நிலவியது. இம்முறை அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தாலும் மும்முனை போட்டி நிலவும். இதனால் இடைத்தேர்தல் முடியும் வரை தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும் என தெரிகிறது.