அரசியல்

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு; அதிமுக எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

By Christon
13 May 2026, 03:29 PM
"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்ட நிலையில், அதன் மீது பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "அதிமுகவில் ஒரு பிரிவினர் மட்டும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தவறான ஒன்று" என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தவெக 144 வாக்குகள் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதல்வர் தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொன்னால், எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நடக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து ஒரு தரப்பினர் வீட்டிற்கு சென்று வருவது எந்த விதத்தில் நியாயம்?

எத்தனையோ கட்சிகள் ஆட்சியில் இருந்து இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறது. ஆனால் எந்த தலைவரும் பிரிந்த இயக்கத்தினரை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்றது கிடையாது. ஆனால் ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

சட்டப்பேரவையில் தவெகவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிறகும் ஆதரவளித்துள்ளனர். இதற்கிடையில் குதிரை பேரம் நடந்து கொண்டு இருப்பதாக பேசப்படுகிறது. உண்மையில் தூய்மையான ஆட்சி நடத்துவோம் என்று சொல்லிவிட்டு இதற்கு எல்லாம் இடம் அளிக்கிறார்கள் என்று பார்க்கும் போது மக்கள் தான் இதற்கு நல்ல முடிவை கட்ட வேண்டும். இன்றைக்கு தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்ததால் 107 இடங்கள் தான். ஒருவர் பங்கேற்க நீதிமன்ற தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். அதனால் தவெகவின் இடம் 106 தான் உள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் கட்சியினர், தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் தான் அந்த 118 இடங்களுக்கு மேல் கிடைத்து ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன நடை முறைகளை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் பின்பற்றவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் இன்றைக்கு அவர்கள் 34 சதவீத வாக்குகள் தான் பெற்று இருக்கிறார்கள். 66 சதவீதம் பேர் இன்னும் தவெக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அதிமுக வலிமையான இயக்கம். தவெக கூட்டணியில் அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அதிமுக உறுப்பினர்களிடம் பேரம் நடத்தி உள்ளதாக தெரிகிறது. மேலும், 6 அமைச்சர், வாரிய தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளித்துள்ளனர். அதேபோல், நாங்கள் எங்கள் கூட்டணியை தவிர யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை" என்று அவர் கூறினார்.