புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் ஏற்கனவே இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீண்ட இழுபறிக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த அதிரடி பேச்சு கூட்டணியில் இருந்து அவர் வெளியேறக்கூடும் என்ற அரசியல் ஊகங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நசீம் கோரிக்கை விடுத்தார். ஆளும் கூட்டணி உறுப்பினர்களும் சிறப்பு அந்தஸ்து கோரி வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெற முடியும். யூனியன் பிரதேசமாக இருப்பதால் அரசுக்கும் சட்டசபைக்கும் போதிய அதிகாரங்கள் இன்றி சிரமப்படுகிறோம். பிரதமர் மோடியைச் சந்தித்து நேரில் வலியுறுத்தியும் நிலைமை மாறவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை இழக்கவும் நான் தயார். அனைவரும் டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரிக்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் இல்லாததால் மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமே தீவிரமாக வலியுறுத்த வேண்டும் எனத் தற்காலிக சபாநாயகர் ஏ.அன்பழகன் சுட்டிக்காட்டினார்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு காட்டும் தாமதத்தால் அதிருப்தியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இருந்து விலக ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கூட்டணியை முறித்துக் கொண்டால், தமிழக வெற்றிச் கழகம் (தவெக) மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைத் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.