தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விஜய் உடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் சி.வி. சண்முகம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள ஒரு மாநிலங்களவை இடத்தைக் கைப்பற்ற தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தச் சூழலில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "மாநிலங்களவை சீட் தொடர்பாக முதலமைச்சர் விஜய் உடன் நேரில் ஆலோசனை நடத்தப்படும். இது குறித்து இருதரப்பும் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்" என்று கூறினார். மேலும், முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் ஒரு உயர்ந்த தலைவர் என்று குறிப்பிட்ட அவர், விஜய்யும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தச் சந்திப்பு நிச்சயமாகத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், "கூட்டணியைப் பொறுத்தவரை டெல்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும். தற்போதைய நிலவரப்படி திமுக இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக நீடிக்கிறது; எனினும், அதில் ஏதேனும் புதிய மாற்றங்கள் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது" என்று விளக்கமளித்தார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவாக 5 எம்.எல்.ஏ-க்களைக் கொடுத்த காங்கிரசுக்கு இந்த எம்பி சீட் வழங்கப்படுமா அல்லது தவெக தனது முதல் டெல்லி வாய்ப்பைத் தன் வசமே தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.