அரசியல்

தொகுதி மறுவரையறை: ராகுல் காந்தி வேண்டுகோளுக்கு அன்பாய் NO சொன்ன மு.க.ஸ்டாலின்!

By Santhosh V
29 Nov 2026, 01:00 PM
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைக்கு மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில், தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்துள்ள ஆதரவை மறுபரிசீலனை செய்யுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இரு தலைவர்களின் கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வரவுள்ளனர்.

ராகுல் காந்தி வைத்த கோரிக்கை

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை திமுக எதிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், தேர்தல் வரைபடத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல்

தமிழர்களுக்கு எதிரான சக்திகளை எதிர்ப்பதில் தனது சகோதரர் மு.க.ஸ்டாலின் எப்போதும் பாறையைப் போல உறுதியாக நின்றுள்ளதாக ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

நாட்டின் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாங்கள் கட்டபொம்மன்கள்... எட்டப்பர்கள் அல்ல!

ராகுல் காந்தியின் பதிவுக்குப் பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டே திமுக ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாறு தங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



நிலைப்பாட்டை மாற்றுமா திமுக?

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே திமுக தனது முடிவுகளை எடுக்கும் என்பதை மு.க.ஸ்டாலின் தனது பதிலின் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மசோதாவுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து அவர் நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், தற்போதைய நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சென்னை சந்திப்பு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றுமா அல்லது ஏற்கெனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு தேசிய அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.