அரசியல்

“என் துணிச்சலைச் சோதிக்க முடியாது..” நகை சர்ச்சை குறித்து அமைச்சர் கீர்த்தனா பதில்!

By Christon
27 Oct 2026, 10:57 AM
திருப்பதியில் அணிந்திருந்த நகை குறித்த சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அவர் அணிந்திருந்த காசு மாலை தான் இந்தச் சர்ச்சைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்த வேட்புமனு அபிடேவிட்டில், தனக்கு 3 பவுன் தங்க நகைகள் மட்டுமே இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், திருப்பதி கோயிலில் அவர் அணிந்து வந்த காசு மாலை மட்டுமே சுமார் 10 சவரன் இருக்கும் என்பதால், தேர்தலில் அவர் தவறானத் தகவலைச் சமர்ப்பித்தாரா என்ற விவாதம் இணையத்தில் தீவிரமாக எழுந்தது. இதனிடையே, அந்த நகை உண்மையான தங்கம் அல்ல என்றும், அது ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியாக வாங்கப்பட்ட கவரிங் நகை என்றும் சில தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தம்மைச் சுற்றி எழுந்த நகைச் சர்ச்சைகளுக்கு எக்ஸ் தளம் வாயிலாக அமைச்சர் கீர்த்தனாப் பதிலளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஒரு சாதாரணப் பெண் என்பதால் தானோ என்னவோ, என்னுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும், ஏன் என் நகையின் தரத்தைக் கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள். இனி நான் பேசும் பேச்சுகள் வைரலாகும் போதெல்லாம், அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்.

தங்கத்தை எத்தனை முறை சோதித்துப் பார்த்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் பின்னால் முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது.

விமர்சியுங்கள், ஆராயுங்கள், சோதித்துப் பாருங்கள். என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; ஆனால் என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.