சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரிவினையின்போது, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், பின்னர் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புக்காக காத்திருந்தார்.
அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பலருக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கியபோதும், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாதது அவரது அதிருப்திக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது கரூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அறிக்கையில், "எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். பதவிக்காக அல்ல, இந்த இயக்கத்தை என் உயிராகக் கருதி உழைத்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எத்தனை சோதனைகள் வந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை உறுதியாக ஆதரித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "திமுக ஆட்சியில் என் மீது 43 பொய் வழக்குகள் போடப்பட்டன. என் குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டனர். கரூரில் செந்தில் பாலாஜியை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக கொடியை மீண்டும் உயர்த்தினோம். ஆனால், இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்க்கும் முடிவை தலைமையே எடுத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், திமுகவுடன் சமரசம் செய்யும் முடிவை ஏற்க முடியவில்லை. பல தியாகங்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்தது துரோகம்தான். அதனால் மீளா கண்ணீருடனும் மிகுந்த மனவேதனையுடனும் அதிமுகவிலிருந்து விடைபெறுகிறேன். கரூர் மக்களுக்கான என் மக்கள் சேவை தொடர்ந்து நடைபெறும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.