கோவையில் திராவிடர் கழகம் சார்பில், 'பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா' என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
"மறக்க முடியாத சாதனை பெரியார் அறிவுலகம்"
நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருந்தாலும், என்னால் மறக்க முடியாத சாதனையாக அமைந்தது பெரியார் அறிவுலகம் தான். கடந்த 5 ஆண்டுகளில் கோவைக்குத்தான் நான் அதிகமுறை வந்துள்ளேன். செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம், சி. சுப்பிரமணியம் மேம்பாலம் என கோவையின் பெருமையைச் சொல்லக்கூடிய அளவிற்குப் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டார்.
"மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு"
தொடர்ந்து தவெக அரசை விமர்சித்துப் பேசிய அவர், "மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வந்தபோது மின்வெட்டு ஏற்பட்டது. ஜெனரேட்டரிலிருந்து மின்சாரத்தை மாற்றும்போதுதான் மின்வெட்டு ஏற்பட்டது என அமைச்சர் விளக்கம் அளிக்கிறார். தவெக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டும், அரிவாள் வெட்டுமாகவே இருக்கிறது. தொழில் நகரமாக இருந்த கோவை, இப்போது குற்ற நகரமாக மாறிவிட்டது. ஒரே வாரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. தவெக அரசின் மின்வெட்டுக்காக மக்கள் வீதியில் இறங்கிப் போராடியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை" என்று சாடினார்.
"ஜோசியர் பேச்சைக் கேட்டு நடக்கும் அரசு"
மேலும் தவெக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து, "பெரியார் அறிவுலகம் தொடக்க நிலையில் இருந்திருந்தால் இதற்கும் மூடுவிழா நடத்தப் பார்த்திருப்பார்கள். நாம் 99% பணிகளை முடித்துவிட்டதால் வேறு வழியில்லாமல், ஜோசியர் சொன்ன நாளில் வந்து திறந்து வைத்துள்ளார்கள். இந்த ஆட்சியில் முதலமைச்சர் என்ன ஆடை அணிய வேண்டும், அலுவலகம் எங்கு இருக்க வேண்டும், என்ன பொட்டு வைக்க வேண்டும் என்பது வரை அனைத்துமே ஜோசியர் தான் முடிவு செய்கிறார். ஆன்லைன் மூலம் அவதூறுகளைப் பரப்பி சினிமாவில் ஜெயித்த ஃபார்முலாவை வைத்து அரசியலிலும் ஒரு முறை ஜெயித்துவிட்டார்கள். ஆனால், தமிழக மக்களை இரண்டாம் முறை நிச்சயம் ஏமாற்ற முடியாது" எனத் தெரிவித்தார்.
"அழுத்த அழுத்த மேலே எழுவதுதான் திமுக DNA"
மேலும் அவர், "சோதனைகளையும், நூலகங்கள் மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகளையும் பார்த்து தவெக மூடர் கூடம் பயப்படுகிறது. ரெய்டு போன்ற மிரட்டல்களுக்கும் அரட்டல்களுக்கும் திமுக பயந்து பின்வாங்கியதாக வரலாறே கிடையாது. எந்த அளவிற்கு அழுத்தப்படுகிறோமோ, அந்த அளவிற்கு மேலே எழுவதுதான் திமுகவின் டி.என்.ஏ" என்று அவர் கூறினார்.