அரசியல்

அரசுப் பள்ளிகளில் லயோலா மணி ஆதிக்கம்? ஆசிரியர்கள் எதிர்ப்பு... அவர் அளித்த விளக்கம் என்ன?

By Bhavani
08 Nov 2026, 09:00 AM
அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை லயோலா மணி மிரட்டுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்தி கல்வித்துறை அதிகாரிகளையும் அரசு ஆசிரியர்களையும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மிரட்டுவதாக கொந்தளிக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சர் ராஜ்மோகனா இல்லை, லயோலா மணியா என கல்வித் துறை அதிகாரிகளும் ஆவேசமாக கேள்வி எழுப்புவதுதான் கல்வித்துறையில் ஹாட் டாபிக்!

இதுகுறித்து அரசு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். தங்களது ஒரு துறை சார்ந்து கேள்வி எழுப்பினால், அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சர் பதில் சொல்கிறார்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அது உண்மைதான் என்று சொல்லும் அளவிற்குத்தான் கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி நிர்வாகத்தில் அதிகார மீறல் தலைதூக்கியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் ராஜ்மோகன். அவர் பள்ளிகளில் ஆய்வுசெய்து அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரையோ, உத்தரவோ பிறப்பித்தால் அதை ஏற்று செயல்படுவதற்கு அந்தத் துறையின் அதிகாரிகளும் ஆசிரியர்களும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அவருக்கு செய்தி, தமிழ் வளர்ச்சி, தொல்லியல் உள்ளிட்ட ஏழு துறைகளின் நிர்வாகத்தையும் கூடுதலாக கவனிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்வர் விஜய்யின் வசமுள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் அன்றாட நிர்வாகப் பணிகளையும் அமைச்சர் ராஜ்மோகனையே கவனித்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ராஜ்மோகன் திறமையானவர், நேர்மையானவர் என்றாலும், பள்ளிக் கல்வித்துறையில் முழுமையாக செயல்படுவதற்கு உரிய நேரம் அவருக்கு கிடைப்பதில்லை.

இதையே வாய்ப்பாக கருதிக்கொண்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தற்போதைய தலைவர் லயோலா மணி, அமைச்சர் போலவே தன்னை நினைத்துக்கொண்டு பள்ளிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைக்கூட ஆசிரியர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால், கல்வித்துறை அதிகாரிகளையும் அரசு ஆசிரியர்களையும் 'ஒழுங்காக வேலை பாருங்கள். இல்லையென்றால் டிரான்ஸ்ஃபர், டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்' என்று லயோலா மணி மிரட்டத் தொடங்கியிருப்பதுதான் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித்துறையிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசுப் பள்ளிக்கூடங்களில் திடீரென ஆய்வுக்கு செல்லும் லயோலா மணி, அங்கு சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைப்பது, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை பராமரிப்பது குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். ஆய்வுக்கு வரும்போது அவர் கூடவே எம்.எல்.ஏ. தவெ.க. நிர்வாகிகள் என 10க்கும் மேற்பட்டவர்கள் வகுப்பறையில் நுழைவதால் மாணவ, மாணவியர்களிடம் அச்சவுணர்வு ஏற்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறோம். வருங்காலத்தில் லயோலா மணி தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கூட்டி ஆலோசித்து, அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம்" என்றார்கள்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், துறைச் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யா ஆகியோரிடமிருந்து விளக்கம் பெற முயன்றோம். ஆனால், இந்த இதழ் அச்சுக்கு போகும் வரை இருவரிடம் இருந்து பதில் வரவில்லை.

நிறைவாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணியிடம் பேசினோம். "முதல்வர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே நான் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்துவருகிறேன். கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் நான் இருப்பதால் பள்ளிகளில் ஆய்வுசெய்ய எனக்கு உரிமை உள்ளது. மேலும், எங்கள் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் புத்தகப்பை உள்ளிட்ட 16 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறோம். அவை தரமானவையாக உள்ளனவா என்று மாணவர்களிடம் தானே விசாரித்து உறுதி செய்துகொள்ள முடியும். அதற்காகவும், காலை உணவு தரமானதாகவும் சுவையாகவும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்கும் பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது.

ஆய்வின்போது குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள் என கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குவது, எந்த வகையிலும் அதிகார துஷ்பிரயோகம் இல்லை. கடந்தகால ஆட்சிகளில் பள்ளி நிர்வாகம் குறித்து வந்த விமர்சனங்களை எல்லோருமே பார்த்திருக்கிறோம் எனவே அதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளை களைவதற்குத்தான் நான் ஆய்வு நடத்துகிறேன். குறைகளை கண்டுபிடித்து, அதை நிவர்த்தி செய்யுங்கள் என்று கூறினால், வேலை செய்ய சொல்கிறார்களே என்று ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் வருத்தப்பட்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? எனது இந்த செயல்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் உற்சாகப்படுத்திவருகிறார்" என்றார்.

நல்லது நடக்கட்டும்.