அரசியல்

"எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க?"- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ!

By Christon
19 Jun 2026, 01:25 PM
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி மாறுவது குறித்து இணையதளங்களில் வெளியான தகவல்களுக்கு அவரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் பல்வேறு அதிரடித் திருப்புமுனைகள் ஏற்பட்டு வரும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி மாறுவது குறித்து இணையதளங்களில் வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 இடங்களைக் கைப்பற்றித் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க ஆட்சி அமைத்துள்ளது. இதனால், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், அக்கட்சியின் அடுத்தடுத்த எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் த.வெ.க மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இதற்கிடையே, விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அவர் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில்தான், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கட்சி மாறுகிறார் என்ற செய்திகள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

தான் த.வெ.க அல்லது திமுகவில் இணையப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தியே என்று செல்லூர் ராஜூ திட்டவட்டமாகப் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தான். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி" என்று தனது பாணியில் நகைச்சுவையாகப் பதிவிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.