அரசியல்

'நோ' சொன்ன உயர்நீதிமன்றம்... உச்ச நீதிமன்றத்தில் முறையீடு; செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

By Christon
31 Jul 2026, 09:17 AM
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்குமா அல்லது கைது நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகச் செந்தில் பாலாஜி, ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதையும், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தார். இதனால் செந்தில் பாலாஜியை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் கைது செய்யக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின.

குதிரை பேரம் வழக்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன்படி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இருப்பினும், நேற்று செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் காலையில் அளித்த பதிலில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறினார். ஆனால், மாலையில் அவரைப் பற்றித் தெரியவில்லை எனத் தெரிவித்தார். இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரா அல்லது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாரா என்ற குழப்பம் நீடிக்கிறது. நிபந்தனையை மீறியதால் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலிஸார் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் முறையிட்டார். இம்மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், செந்தில் பாலாஜியின் மனுவை விசாரிக்கும் போது தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்டக் கைது நடவடிக்கை தொடருமா என்பது தெரியவரும்.