அரசியல்

திமுகவின் முக்கியப் புள்ளி வீட்டில் சோதனை…பதறிப்போய் போன் கால் செய்த ஸ்டாலின்…நடந்தது என்ன?

By Bhavani v
20 Nov 2026, 12:46 PM
குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை முடிவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

குவாரி முறைகேடு புகார்... அடுத்தடுத்து ரெய்டு!

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக இன்று மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கல் குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனை பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பாலமேடு பகுதியில் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் ராஜாமணி ஆகியோரின் வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போன் செய்து விசாரித்த ஸ்டாலின்!

இந்தச் சோதனை முடிவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தலைவர் ஸ்டாலின் எனக்குப் போன் செய்து என்ன நடக்கிறது என்று கேட்டார். அதற்கு நான், ‘தலைவரே, ஒன்றும் பிரச்சினை இல்லை. இது உண்மைக்குப் புறம்பான செய்தி. எல்லாம் முறையாகத்தான் நடக்கிறது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’ என்று தெரிவித்தேன்” எனக் கூறினார்.

மேலும், 2019-ம் ஆண்டு தனது சொந்த இடத்தில் குவாரி நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ராஜாமணி, ஆனந்தராஜ் ஆகியோருக்கு குத்தகை வழங்கியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

குவாரியில் தரமான கற்கள் கிடைக்காததால் ஒருவர் 2021-ம் ஆண்டிலேயே பணிகளைக் கைவிட்டதாகவும், தனது பட்டா நிலத்தில் மண் வெட்டி எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் மூர்த்தி கூறியுள்ளார்.

ஒருபுறம் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீஸ் சோதனை, மறுபுறம் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரம் கேட்ட ஸ்டாலின் என மதுரை அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.