அரசியல்

தவெக பக்கம் திரும்பும் திமுக மாஜிக்கள்? அதிர்ச்சியில் அறிவாலயம்!

By Christon
29 Apr 2026, 01:36 PM
தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிருப்தி நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த திமுகவின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி மாறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்கள் தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுவது திமுக மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறைமுக ஆதரவும் அதிருப்திப் பட்டாளமும்

தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான கருணாநிதி, தனக்குச் சீட் கிடைக்காத விரக்தியில் தனது மகள் மோனிஷாவைத் தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தார். அதேபோல, வில்லிவாக்கம் வெற்றியழகன் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு மறைமுக ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, நாமக்கல் ராமலிங்கம் மற்றும் லால்குடி சவுந்திரபாண்டியன் போன்ற மூத்த நிர்வாகிகளும் திமுக தலைமை மீது கடும் வருத்தத்தில் உள்ளனர். இவர்களுடன் கீழ்மட்ட நிர்வாகிகளான பேரூர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பலரும் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தங்கள் முடிவை அறிவிக்கக் காத்திருக்கின்றனர்.

சமாதானப் படலத்தைத் தொடங்கிய ஸ்டாலின்

கட்சி நிர்வாகிகள் கொத்து கொத்தாகத் தவெக-விற்குத் தாவக்கூடும் என்ற தகவல் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை உடனடியாகச் சந்தித்துப் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.