தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்குள்ளேயே, பல்கலைக்கழக வேந்தர் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று முந்தைய அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், தற்போதைய தவெக கூட்டணி அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்) செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைத் தற்போதைய அரசு பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை" என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசிக பொதுச் செயலாளரின் கண்டனம்
அமைச்சரின் இந்த கருத்துக்குத் தவெக கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதை கைவிடுவது மட்டுமல்ல; இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் இந்த கருத்தைச் சொல்கிறாரா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கூட்டணிக்குள் எழுந்த முதல் மோதல்
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமைந்த புதிய கூட்டணி அரசில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ள சூழலில், மாநில உரிமை சார்ந்த ஒரு கொள்கை முடிவில் அரசுக்கும் கூட்டணிக் கட்சிக்கும் இடையே பகிரங்கமாக இத்தகைய கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.