அரசியல்

அனிதாவுக்கு ஆட்டம் முடிந்ததா? தூத்துக்குடியில் களமிறங்கிய மூவர்!

By Sumalekha
13 Sep 2026, 06:00 PM
தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.
'யாரோடு வேண்டுமானாலும் முட்டி மோதுங்கள். வெற்றிபெற்று வருகிறவர்களை வரவேற்க, ஆராதிக்கத் தயாராக இருக்கிறேன்' எனும் ஸ்டாலினின் இந்த ஸ்டேட்மென்ட் தூத்துக்குடி தி.மு.க.வினரை துள்ளிக் குதிக்க வைத்துவிட்டது. அதன்படி, 'அக்காவாவது தம்பியாவது. மோதி பார்த்துவிடலாம்' என்று மாஜி அமைச்சர் கீதாஜீவனும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் கோதாவில் குதிக்க, கூடவே 'நானும் இருக்கிறேன்' என களமிறங்கியிருக்கிறார் ஜோயல்.

இதற்கிடையே வயது காரணமாக போட்டியிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விலகி நிற்க, உப்பு மண்ணில் அரசியல் காரம் விறுவிறுப்பாகியிருக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி மூத்த உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம்.

*தி.மு.க.வில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதாக சொல்வார்கள். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்படுவதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை தேர்தல் நடத்தி, தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது கட்சித் தலைமை.

அதைத் தொடர்ந்து, 'தேர்தல் நடந்தால் வெட்டுக் குத்து நடக்கும். கட்சியினர் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்பார்கள். வேண்டாத விஷப்பரீட்சை' என்று சிலரும், 'தலைவரே இந்த ஒரு முறை மட்டும் என்னை பரிந்துரை செய்யுங்கள்' என்று சிலரும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் காது கொடுத்து கேட்காத ஸ்டாலின், 'போய் தேர்தல் வேலையைப் பாருங்க.

போட்டி போட்டு ஜெயிச்சுட்டு வாங்க. யார் செல்வாக்காக இருக்கிறாங்கன்னு பார்க்க ஆசைப்படுறேன்' என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகியவை ஒரு மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒரு மாவட்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஒரு வட்டம் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 70 வயது ஆகிவிட்டது. அதனால் அவர் போட்டியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் தன் மகன் மகேஸ்வரனை மாவட்டச் செயலாளராக்க நினைத்தார் அனிதா. ஆனால், அவரோ செலவு செய்ய தயாராக இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார். இதனால் அப்செட்டான அனிதா, மா.செ. பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்யத் தயாராக இல்லை. தனக்கு மாநில அளவில் ஏதாவது பதவி கொடுத்தால் அரசியல் செய்யலாம். இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், அவரது இடத்துக்கு மாநில இளைஞரணி செயலாளராக இருக்கும் ஜோயல், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளராக இருக்கும் உமரி சங்கர் ஆகியோருக்கு இடையில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோயலுக்கு உதயநிதியின் ஆதரவு இருக்கிறது. உமரி சங்கருக்கு ஸ்டாலினின் நண்பரான ராஜா சங்கரின் ஆதரவு இருக்கிறது. இதற்கிடையே, 'ஜோயல் வந்தால் காணாமல் போய்விடுவோம்' என நினைக்கும் அனிதா ஆதரவாளர்களும் ஜோயலை எதிர்க்கிறார்கள்.

அடுத்ததாக தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைத்துக்கொள்ள கீதாஜீவன் தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிட அவரின் சகோதரர் மேயர் ஜெகன் பெரியசாமி முட்டிமோதுகிறார். கீதாஜீவனுக்கு அறிவாலய ஆதரவும், ஜெகனுக்கு கனிமொழியின் ஆதரவும் இருக்கிறது. இருவரும் மோதும் பட்சத்தில் தமிழகத்திலேயே அனல் பறக்கும் உட்கட்சி தேர்தல் களமாக தூத்துக்குடி இருக்கும்.

இவர்களுடன் மோதுவதற்கு ஓட்டபிடாரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையாவும் தயாராக, விளாத்திகுளம், கோவில்பட்டி மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும், கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதியும் துடிக்கிறார்கள். கீதாஜீவன் தன் பெயரை பரிந்துரை செய்வார் என்கிற தைரியத்தில் கருணாநிதி இருக்கிறார்.

அதே நேரம் அவரை எதிர்த்துப் போட்டியிட தயாராகிவிட்டார் மார்க்கண்டேயன். 'நான்தான் கோவில்பட்டி தொகுதிக்கு மா.செ என்று சொல்லிக்கொண்டிருந்த கடம்பூர் மாணிக்கராஜாவுக்கு வயது 70ஐ கடந்துவிட்டதால் அவர் தற்போது அமைதியாகிவிட்டார்" என சொல்லி முடித்தார்கள்.

கீதாஜீவனிடம் கேட்டோம். கட்சி எனக்கு கொடுத்த இதுகுறித்து அத்தனை பொறுப்புகளையும் சிறப்பாக செய்திருக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியை நன்றாக வளர்த்திருக்கிறேன். எனவே, நான் மா.செ பதவிக்கு போட்டியிட தயாராக இருக்கிறேன்." என்றார். மேயர் ஜெகன் பெரியசாமி, "இளைஞர்கள் மூலமாக கட்சியை வளர்த்தெடுக்க நினைக்கிறார் தலைவர். அந்த வகையில் மா.செ. பதவிக்கு போட்டிபோட நானும் தயாராக இருக்கிறேன்" என்றார்.

மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனோ, "வயது மூப்பு காரணமாக மா.செ பதவி இல்லை என்று சொல்லிவிட்டது தலைமை அதை முழு மனதுடன் வரவேற்கிறேன். கட்சி எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலோ, தலைவர் மற்றும் இளந்தலைவர் ஆசியுடன் கட்சி பணியாற்ற நினைக்கிறேன். மா.செ. பதவி என்பது ஒவ்வொரு தி.மு.க. தொண்டனின் கனவு. எனவே நான் அந்த போட்டியில் இருக்கிறேன்" என்றார். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், -38 வருடங்களாக கட்சி மாறாமல் தலைமை கொடுத்த அனைத்து பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறேன். எனவே மா.செ. பதவிக்காக போட்டியிடுவேன்” என்றார்.

கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி, 'இப்போது நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அக்கா கீதாஜீவன் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன்" என்றார். விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கட்சித் தலைமை என்ன சொன்னாலும் அதை செய்ய காத்திருக்கிறேன்" என்றார். ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா நம் அழைப்பை ஏற்கவில்லை.

ரைட்டு!

எஸ்.அண்ணாதுரை