அரசியல்

காலியாகும் அதிமுக கூடாரம்..செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

By Christon
13 Oct 2026, 11:07 AM
அதிமுகவில் இருந்து விரைவில் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர் இடைத்தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி பூசல்களால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்த கட்டமாக வெளியேறத் தயாராகி வருவதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் பின்தங்கியது. இந்தத் தோல்விக்குப் பிறகு, அதிமுகவுக்குள் நிலவும் அதிருப்தி வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் ரகசியமாகத் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சில முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கட்சியை விட்டு விலகி தவெகவில் இணைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பிரிவு வெளியேறத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய உட்கட்சி நிலவரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "யானை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல அதிமுகவின் நிலை மாறியுள்ளது" எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்து 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியே வரப்போவதாகவும், இது கட்சித் தலைமைக்குத் தெரியுமா இல்லையா என்பது கேள்விக்குறிதான் என்றும் தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது தனக்கு ஒரு வகையில் சாதகமாகவே முடிந்தது எனக் குறிப்பிட்ட செங்கோட்டையன், "அன்று என்னை நீக்கியதால்தான் தப்பித்து வந்து இன்று வருவாய்த்துறை அமைச்சராகப் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இல்லையென்றால் நானும் முன்னாள் அமைச்சராகவிருந்து வாய்ப்பை இழந்து தவித்திருப்பேன்" என்று கூறினார். மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதலமைச்சர் விஜயைப் போன்றதொரு தலைவரைத் தான் பார்த்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து விலகி வருபவர்களைத் தவெக மகிழ்ச்சியுடன் வரவேற்கும் என்று கட்சியின் தரப்பிலிருந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்தத் பேச்சு தற்போதைய அரசியல் சூழலில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.