தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
"அதிகார ஆசை காட்டி நடந்த பிரைன் வாஷ்"
மேடையில் ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசிய திருமாவளவன், "தேர்தலுக்கு முன்பாக டெல்லிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் என்னை பிரைன் வாஷ் செய்ய ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி செய்தார். துணை முதல்வர் பதவி, அதிகாரப் பகிர்வு என்று பல ஆசைகளைக் காட்டி, முக்கியப் புள்ளிகள் மூலமும் என்னிடம் பேச வைத்தார். ஆனால், 'சாரி' என்று கூறி அவரது கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விசிக கொள்கை ரீதியாக அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரை 6 மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டிய சூழல் உருவானதாகவும்; பின்னர் அவர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தபோது வாழ்த்தி அனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.
ஜான் ஆரோக்கியசாமியுடன் சந்திப்பு
அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு தொடக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தியை வைத்து புத்தகத்தை வெளியிடவே நினைத்திருந்தோம். ஆனால், திடீரென ஒருநாள் ஜான் ஆரோக்கியசாமியை ஆதவ் அர்ஜுனா அறிமுகப்படுத்தினார். புத்தகத்தை விஜய் வெளியிட, நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அப்போது கூட்டணிக்கான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை என்பதால் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று கூறியும், ஆதவ் அர்ஜுனா விசிக அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றே பேசினார்" என்று விளக்கமளித்தார்.
"பதவி ஆசையால் மாறவில்லை"
திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்தது குறித்துப் பேசிய அவர், "அதிகார வேட்கைக்காகவோ அல்லது பதவி ஆசைக்காகவோ இந்த அணியை நாங்கள் தேர்வு செய்யவில்லை. பதவிக்காக ஒரு கூட்டணியை உடைத்தான் திருமாவளவன் என்ற பழியைச் சுமக்க நான் தயாராக இல்லை. பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகக் கொண்டுள்ள தவெக மற்றும் விசிக இணைந்துள்ள இந்த முடிவின் பின்னணியில் வரலாற்று நியாயங்கள் உள்ளன. மக்கள் ஏற்கனவே விஜய்யைத் தேர்வு செய்துவிட்டார்கள்" என்று கூறினார்.