இந்தியா

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

By Christon
27 Jun 2025, 02:48 PM
அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கடந்த 25 தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவு செய்தது. இதுதொடர்பாக நேற்று ( ஜூன் 26) டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை அம்பேத்கர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றம் செயல்படாமல், நீதித்துறை முடக்கப்பட்ட அவசரகால நிலையில் இந்த வார்த்தைகள் 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து முன்பு விவாதிக்கப்பட்டன. ஆனால் இந்த வார்த்தைகளை நீக்குவது குறித்து எந்தத் விதமான முடிவும் எட்டப்படவில்லை. அவை முகப்புரையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

அவசரநிலையை திணித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான கட்டாய கருத்தடைகள், மக்கள் சிறைப்பிடிப்பு, நீதித்துறை மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறைக்கப்பட்டது.

அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தவர்கள் இன்று அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் நடமாடுகிறார்கள். அவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை, மன்னிப்பு கேளுங்கள்” என்று வலியுறுத்தினார்.

முன்னதாக கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “அவசரகால நிலையை ஒரு "இருண்ட அத்தியாயம்" என்று கூறி, "தேசம் ஒருபோதும் சர்வாதிகாரத்திற்கு தலைவணங்காது" என்று கூறினார்.

அவசரகால நிலை, முகப்புரை மற்றும் அரசியலமைப்பு போன்ற முக்கிய கூறுகளை மாற்றியமைத்து, நீதித்துறையை பலவீனப்படுத்தி, ஜனநாயக உரிமைகளை முடக்கியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.