வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அல்ல மாறாக, ஒரு தேசம் தனது ஜனநாயகப் பாதையிலிருந்து விலகும் போது அதைச் சரிசெய்யும் விழிப்புணர்வு செயல்பாடாகும்.
அவ்வகையில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியப் பொதுச்செயலாளர் பிரசேன்ஜீத் குமார், இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி.
பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (INUSU) தலைவர் அதிதி மிஸ்ரா, துணைத் தலைவர் கிழக்கூட் கோபிகா பாபு, டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்யன் மான் போன்றோர் சமகாலச் சூழலில் தலைவர்களாக வளர்ந்துவருகிறார்கள்.
இம்மாணவர் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர்கள் யூனியன் (NSUI). இடதுசாரி மாணவர் அமைப்புகளான SFI & AISA, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர் உரிமை சார்ந்த அமைப்பான பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் (BAPSA ), பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் போன்ற வெவ்வேறு சித்தாந்தப் பின்னணியில் இருந்து உருவாகிவருகிறார்கள்.
இத்தகு இளந்தலைவர்கள் வரிசையில், இந்திய மாணவர் அரசியலில் தனித்துவமான முத்திரையைப் பதித்து, உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் இளம் தலைவர் நேஹா போரா (Neha Bora) தேசத்தின் கவனத்தை கவர்பவராக திகழ்கிறார்.
இந்தியாவின் மனித உரிமைப் போராளிகள், மாணவர் இயக்கத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளின் பின்னணியில், நேஹா போராவின் குரலும் போராட்ட வரலாறும் முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுத்துறை பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்குவது, கல்வி நிதி வெட்டு போன்ற மாணவர் நலன் சார்ந்த பல்வேறு சிக்கல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார் நேஹா போரா.
பல்கலைக்கழக வளாகங்களில் பெண்களுக்கு பாதுகாப்பானச் சூழலை உருவாக்குவது. பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்வது, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சமூகநீதியை வலியுறுத்துவது போன்றவற்றுக்காக தீவிரமாகப் பணியாற்றுகிறார். அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநில மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் கொண்டவர்.
தலித் பகுஜன் உரிமை, பெண்கள் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் நேஹா போரா, தனது போராட்ட வழியில் பலவிதமான அரசு சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார். அரசுப் பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வுக்கு எதிராகவும், ஏழை மாணவர்கள் கல்விக் கடனின்றி படிப்பதற்கான வசதிகளை வலியுறுத்தியும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் முன்னின்று செயல்பட்டார்.
கல்விக்கூடங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல் மற்றும் முறையான வழிகாட்டுதலின்மைக்கு எதிராக குரல் எழுப்பி, அவர்களுக்கான சிறப்பு உதவி அமைப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப் பகுதியிலிருந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நீளும் இவரது பயணம், இந்திய மாணவர் இயக்கங்களின் துடிப்பையும், எளிய பின்னணியில் இருந்துவரும் ஒரு பெண்ணின் சமூகப் போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. நேஹா போரா, உத்தரகாண்ட் மாநிலத்தின் கிராமப்புற பின்னணிகொண்டவர்.
இமாலய மலையடிவாரப் பகுதிகளில் நிலவும் கடுமையான வாழ்வியல் சூழல், வளங்களின் பற்றாக்குறை, இடப்பெயர்வு சார்ந்த பிரச்னைகள் போன்றவை இவரை இளம் வயதிலேயே சமூக உணர்வு உள்ளவராக மாற்றியது. உத்தரகாண்டின் சுற்றுச்சூழல் இயக்கங்கள், உள்ளூர் சமூகப் போராட்டங்கள் இவரது சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. உயர்கல்விக்காக நகர்ப்புறங்களை நோக்கி வரும் எளிய மாணவர்களின் சவால்களை நேரில் கண்டது, மாணவர் நலன்களுக்காகவும் சமூகநீதிக்காகவும் போராடும் உறுதியை இவருக்கு அளித்தது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது நேஹாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ஜேஎன்யூ பல்கலைக்கழகம் ஜனநாயகக் களத்திற்கும், தீவிர அரசியல் விவாதங்களுக்கும் பெயர்பெற்றது. இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் மூலம் தனது தீவிர அரசியல் பயணத்தை நேஹா தொடங்கினார். பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டண உயர்வு, விடுதிப் பற்றாக்குறை மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான போராட்டங்களில் முன்னணி நபராக நேஹா பங்கேற்றார்.
மாணவர் நலன் சார்ந்த தளங்களைத் தாண்டி, பரந்த சமூகப் பிரச்னைகளுக்காகவும் இவர் தீவிரமாகப் போராடிவருகிறார். கடந்த சில ஆண்டுகளில், பல முக்கியப் பொதுப் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டத் திருத்தங்களுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வது இவரது முதன்மை பாணியாக இருக்கிறது.
கார்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கு பழங்குடியினரின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு நேஹா ஆதரவளித்தார். இவ்வகையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், வாழ்வாதாரத்தை இழக்கும் விளிம்புநிலை மக்களின் குரலாக இவர் விளங்குகிறார்.
முறைசாரா துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் கூலி உயர்வு, வேலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சூழல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோதிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளை வேலைசெய்ய விடாமல் தடுத்தல் போன்ற கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பலமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டு, சிறைவாசத்தையும் எதிர்கொண்டிருக்கிறார். கல்வி சார்ந்த இவரது செயல்பாடுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டதோடு, வளாகத்திற்குள் நுழைய தடை, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஆளானார்.
சமூக வலைதளங்களில் நேஹா போராவிற்கு எதிராகப் போலிப் பிரசாரங்களும், தனிப்பட்ட முறையில் ஆபாசமான கருத்துகளும் பரப்பப்பட்டன. சமூக ஊடகங்கள் மூலம் அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்களும், பாலியல் அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் இருந்தன. இது இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உளவியல் ரீதியான அமைதியைப் பெரிதும் பாதித்தது.
அரசு இயந்திரங்கள், உளவுத்துறையின் மூலம் இவரது நகர்வுகளை தொடர்ந்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும், இவரது போராட்டங்களை முடக்கும் நோக்கில் இவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.
அதேவேளை சர்வதேச, தேசிய அளவிலான மனித உரிமை அமைப்புகள், நேஹா போரா மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன. அடக்குமுறைகளுக்குப் பயப்படாமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் இவரது துணிச்சல், பல இளம் தலைமுறையினருக்கு சமூகப் பணிகளில் ஈடுபட ஊக்கமாக அமைகிறது.
நேஹா போராவின் சமீபத்திய போராட்டங்களும், அவர் எதிர்கொண்ட கடுமையான அடக்குமுறைகளும், ஒரு ஜனநாயக சமூகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கும் போராட்டங்களுக்கும் இருக்கும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுகின்றன. அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகவும் இவரது குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
இன்றைய சூழலில் மாணவர் அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அடையாளமாக நேஹா போரா திகழ்கிறார். மேடைப் பேச்சுகளோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி போராடும் இவரது குணம், இவரை மாணவர் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராக்கியது. கருத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் துணிச்சலான நிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் நேஹா.
இவரைப் போன்ற தலைவர்களின் வரவு, இந்திய மாணவர் இயக்கம், கட்சி அரசியலுக்கான தளம் மட்டுமல்ல, அது ஜனநாயக விழுமியங்களையும் சமூகநீதியையும் காப்பதற்கான முதன்மை அரண் என்பதை மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது
(தலைவர்கள் வருவார்கள்...)