டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கை கூப்பி மன்னிப்பு கோரிய சிறுமி
வைரலாகி வரும் அந்த வீடியோவில், "போராட்டத்தில் சிலர் கூறியதைக் கேட்டு நான் பிரதமர் பற்றித் தவறாகப் பேசிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல என்றாலும், நாட்டின் அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது தவற நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்," என்று அப்பெண் கைகூப்பியபடிப் பேசியுள்ளார். மேலும், இதுவே தனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும் என்றும் தன்னைக் மன்னிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, நோய்டா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அப்பெண் மீது பூஜ்ய முதல் தகவல் அறிக்கை (Zero FIR) பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் அச்சிறுமியின் வயது 25 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் தான் 15 வயது சிறுமி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவு
பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதி காக்குமாறும், தவறு செய்தவர்களை மன்னிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்தச் சிறுமியின் மன்னிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
பிரதமர் தனது பதிவில், "ஜந்தர் மந்தரில் நடந்ததை நாடும் உலகமும் பார்த்தது. வழிகாட்டல் இல்லாத சில இளைஞர்கள் நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். என் மீதும், மறைந்த என் தாயார் மீதும் அவதூறுகள் வீசப்பட்டன. இருப்பினும், இதற்கு கோபமும் பழிவாங்கும் நடவடிக்கையும் தீர்வாகாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இளமைப் பருவத்தில் தவறுகள் நடப்பது இயல்பு; அதைச் சரிசெய்ய வாய்ப்பளிப்பதே சரியான வழி. இவர்கள் வழிதவறிய குழந்தைகள். அவர்களைக் நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் இழுத்துத் தண்டிப்பது தீர்வாகாது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் அவர்களை மன்னித்துச் சரியான வழியைக் காட்ட வேண்டும்" எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.