2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளை தேடி வரும் அதிமுக, ஒருங்கிணைந்த அதிமுகவாகவும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தும் தேர்தலை சந்தித்தால் திமுகவிற்கு டஃப் காம்படிஷனை கொடுக்க முடியும் என்கின்றனர் கட்சி சீனியர்கள். ஆனால், சீனியர்களின் பேச்சைக் கேட்காமல் ”தானே ராஜா... தானே மந்திரி” என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி இருந்து வந்ததால், அடுத்தடுத்த தோல்விகள், இரட்டை இலைக்கு சிக்கல் என பல்வேறு பிரச்னைகள் உருவெடுத்தன என்று எடப்பாடியின் செயலால் அதிருப்தியான ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிர்ப்பு என்பது சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என்பதை தாண்டி கட்சியில் உள்ள சீனியர்களிடமும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் என அடுத்தடுத்த மாஜிகள் எடப்பாடியின் செயலால் மன உளைச்சலில் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஒரு வழியாக எஸ்.பி.வேலுமணியை வைத்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுக்காணத் களமிறங்கியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி, என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
எஸ்.பி.வேலுமணியை பொறுத்தவரை, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக 30 பிளஸ் இடங்களை கைப்பற்றி இருக்கும்” என்ற ஓபன் ஸ்டேட்மெண்டாகவே கொடுத்திருந்தார். அவரின் அந்த பேச்சைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் விரைவில் அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டன. தொடர்ந்து, டெல்லி தலைமை எஸ்.பி.வேலுமணியை வைத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டன.
மாஜியை வைத்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்த பாஜக டெல்லி தலைமை, அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுதியே ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டியதாகவும், இந்த கூட்டணிக்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் அவரை கழட்டிவிட்டு, எஸ்.பி.வேலுமணி அல்லது செங்கோட்டையனை தலைமையாக்கிவிடுவோம் என்று எச்சரிக்கை ஓலையை எம்.ஜி.ஆர் மாளிகைக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய சூழலை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கு மேலும் கட்சியை அழித்துவிடக் கூடாது என்று எண்ணி, பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து எஸ்.பி.வேலுமணியை தூது அனுப்பியுள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பிப்ரவரி 26 ஆம் தேதி கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட அமித்ஷா, அங்கே எஸ்.பி.வேலுமணியுடன் சுமார் 30 நிமிடம் பேச்சுவாத்தை நடத்தியதாகவும், அந்த சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, பாஜக – அதிமுக கூட்டணி மற்றும் ஒருங்கிணைப்புக்கு எடப்பாடியார் கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும், ஆனால் முக்கிய டிமாண்ட் ஒன்றை வைத்து, அதற்கு டெல்லி சம்மதித்தால் டீலிங் இறுதி செய்யப்படும் என்று இ.பி.எஸ். சொல்லி விட்டதாகவும் அமித்ஷாவிடம் தகவலை பாஸ் செய்துள்ளார் எஸ்.பி.வேலுமணி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
எடப்பாடி பழனிசாமியின் டிமாண்ட் குறித்து விசாரித்த போது, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இணைக்க ஓகே தான் என்றும், ஆனால் அவருக்கு பொருளாளர் பதவியே வழங்கப்படும் என்று எடப்பாடி ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். அதேபோல், பாஜக உடன் மட்டுமல்ல டிடிவியின் அமமுகவுடனும் கூட்டணி வைக்கத் தயார் தான், ஆனால் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்க்கவே முடியாது... அதனால் சசிகலாவை கழட்டிவிடுங்கள் என்று டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல், தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதோடு, கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலிய்றுத்தி கேட்டுக்கொண்டுள்ளாராம். இதற்கெல்லாம் சம்மதித்தால் உடனடியாக கூட்டணிக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயார் என்று எஸ்.பி.வேலுமணி மூலம் அமித்ஷாவுக்கு தகவலை பாஸ் செய்துள்ளாராம் எடப்பாடி.
எடப்பாடியின் இந்த டிமாண்டிற்கு டெல்லி தலைமையும் ஓகே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஒரு வழியாக எடப்பாடியாரை சமானதானப்படுத்தியதற்கும், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கும் காரணமாக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று டெல்லி தலைமை சொன்னதின் அடிப்படையில், அவரின் மகன் திருமணத்திற்கு பாஜக சீனியர்ஸ் படையெடுத்தனர் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்புக்கான கிரீன் சிக்னலை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி எவ்வளவு பெரிய தாக்கத்தை சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.