உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 17 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 1ம் தேதி சென்னை சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் உத்தராகண்ட் சென்றுள்ளனர். பின்பு அங்கிருந்து வேன் மூலம் அனைவரும் அந்த மாநிலத்தில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்து வந்தனர்.
அந்த வகையில் தமிழர்கள் 30 பேரும் ஆதிகைலாஷ்க்கு வேனில் புறப்பட்டனர். பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கிமீ தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் சிக்கித் தவித்தனர். இது குறித்து அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தராகண்ட்டின் பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நிலச்சரிவால் பரிதவித்த தமிழர்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பேரில் தமிழர்கள் 30 பேரும் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்குள்ள ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், ‘’உத்தராகண்ட்டில் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரத்தை சேர்ந்த 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கடலூருக்கு அனுப்பி வைக்கும்படி, அங்குள்ள மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்’’என்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாகோட் மற்றும் நந்த்பிரயாக் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ஆனால் அந்த பாதையிலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா சென்றவர்கள் உள்பட பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். தொடர்ந்து உத்தராகண்ட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கும்படியும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?