சச்சின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?.. ஸ்மித், வில்லியம்சன் சாதனை சமன்!

Joe Root Will Brake Sachin Tendulkar Record : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட் இன்னும் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Jul 22, 2024 - 08:45
Jul 22, 2024 - 11:39
 0
சச்சின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?.. ஸ்மித், வில்லியம்சன் சாதனை சமன்!
ஜோ ரூட் மற்றும் சச்சின் டெண்டுல்கர்

Joe Root Will Brake Sachin Tendulkar Record : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. அபாரமாக ஆடிய ஓலீ போப் 121 ரன்கள் எடுத்தார். பென் டக்கட் 71 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும், எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அல்ஷாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், கவேம் ஹோட்ஜ், கெவின் சின்கிளைர், ஜேடன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் எடுத்தது. அற்புதமாக ஆடிய கவேம் ஹோட்ஜ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 171 பந்துகளில் [19 பவுண்டரிகள்] 120 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து, 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அட்டகாசமான சதத்தை விளாசினார். இது அவருக்கு 32ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரி புரூக் பேஸ்பால் முறையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டு 132 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 425 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் யாருமே நிலைத்து ஆடவில்லை. இதனால், 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் வாக் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் சாதனயை சமன் செய்துள்ளார். மூவரும் 32 சதங்களை எடுத்துள்ளனர்.

இவர்களுக்கு முன்னதாக அலைஸ்டர் குக் 33 சதங்களும், ஜெயவர்தனே, பிரையன் லாரா, சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான் ஆகியோர் 34 சதங்களும், ராகுல் டிராவிட் 36 சதங்களும், இலங்கை வீரர் சங்ககரா 38 சதங்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 41 சதங்களும், ஜாக் காலிஸ் 45 சதங்களும், சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களையும் விளாசியுள்ளனர்.

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 20 சதங்கள் தேவையாக உள்ளது. ஜோ ரூட்டிற்கு தற்போது 33 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், 3 அல்லது 4 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் ஆண்டுக்கு 6 சதங்கள் எடுத்தாலும், சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில், 11,940 ரன்களை குவித்துள்ளார். அதேபோல், சச்சின் ஒட்டுமொத்தமாக 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரின் இந்த சாதனையை முறியடிக்க 3,981 ரன்கள் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் ரன்கள் எடுத்தால் இந்த சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவே கருத்தப்படுகிறது. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow