கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பாஜகவை சேர்ந்த ஆனந்த போஸ் இருந்து வருகிறார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலம் என்பதால், மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஆனந்த போஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்தது.
மிகப்பெரிய மோதல்களில் அவ்வப்போது இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் ஆளுநர் ஆனந்த போஸ், பாஜக தொண்டர்கள் பக்கம் நின்று கொண்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
மேலும் மாநில அரசின் பல்வேறு விவகாரங்களில் அவர் மூக்கை நுழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆளுநரின் நடவடிக்கைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த மே மாதம் மேற்கு வங்க ஆளுநர் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். இதேபோல் டில்லியில் உள்ள தனியார் விடுதியில் வைத்து ஆனந்த போஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த நடன கலைஞர் ஒருவரும் புகார் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு புகார்கள் குறித்தும் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக மம்தா பானர்ஜி, ஆளுநர் ஆனந்த போஸை மிக கடுமையாக சாடினார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, ''மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் அலுவலகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இப்போது ஆளுநர் மாளிகைக்கு செல்லவே பெண்கள் பயப்படுகின்றனர்'' என்று கூறி இருந்தார்.
இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் ஆளுநர் ஆனந்த போஸுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தனக்கு எதிராக மேலும் கருத்து தெரிவிக்க மம்தா பானர்ஜிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆனந்த போஸ் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ண ராவ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து ஆளுநரின் பதவிக்கும், மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது'' என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கிருஷ்ண ராவ், ''ஒரு மாநிலத்தின் ஆளுநர் அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மீது அவதூறு கருத்துக்கள் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஆனந்த போஸுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களையும், தவறான கருத்துக்களையும் கூற சமூகவலைத்தளங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது'' என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.