India Vs Srilanka ODI Series: இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன?.. வீரர்கள் சறுக்கியது எங்கே?

ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஸ்விப் ஷாட் விளையாடும் ரிஷப் பண்ட்டுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே வேளையில் கொஞ்சம் கூட ஃபுட்வொர்க் (கால்களை நகர்த்தி ஆடுதல்) இல்லாமல் விளையாடும் ஷிவம் துபேவுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Aug 8, 2024 - 08:45
Aug 8, 2024 - 09:23
 0
India Vs Srilanka ODI Series: இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன?.. வீரர்கள் சறுக்கியது எங்கே?
India Vs Srilanka ODI Series

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி முடித்துள்ளது.  இதில் மூன்று டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை வொயிட்வாஷ் செய்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக விளையாடி தொடரை இழந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி இந்தியா, இலங்கை என யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி ஆட்டம் சமனில் முடிந்தது. 2வது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டி மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

தொடரை இழந்த இந்திய அணி 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்பு விளையாடிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டது. இந்த வெற்றியின்மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணம் இந்திய அணி வீரர்களின் மோசமான பேட்டிங்தான். ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே 2 அரைசதங்கள் விளாசியுள்ளார். முதல் போட்டியில் 47 பந்தில் 58 ரன்கள் விளாசிய அவர், 2வது போட்டியில் 44 பந்தில் 64 ரன்கள் விளாசினார். 3வது போட்டியிலும் அதிரடியாக 20 பந்தில் 35 ரன்கள் நொறுக்கினார்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டம் 

கேப்டன் ரோகித் சர்மா தவிர மற்ற எந்த வீரரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சுப்மன் கில் (3 போட்டிகளில் 57 ரன்), விராட் கோலி (3 போட்டிகளில் 58), ஷ்ரேயாஸ் (3 போட்டிகளில் 38) மற்றும் கே.எல்.ராகுல் (2 போட்டிகளில் 31) என முன்னணி வீரர்கள் படுமோசமாக விளையாடி அணியை தோல்விக்கு பாதைக்கு தள்ளியுள்ளனர். 

இதேபோல் இளம் வீரர்கள் ஷிவம் துபே (3 போட்டிகளில் 34), கடைசி போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ரியான் பராக் ஆகியோரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதே வேளையில் அக்சர் படேல் (3 போட்டிகளில் 79 ரன் மற்றும் 4 விக்கெட்), தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் (3 போட்டிகளில் 55 ரன் மற்றும் 5 விக்கெட்) ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடினார்கள்.

முகமது சிராஜ், . குல்தீப் யாதவ் சொதப்பல் 

இந்திய அணியின் தோல்விக்கு அடுத்த காரணம் பவுலிங் யூனிட்டும் சொதப்பியதுதான். பொதுவாக இலங்கையுடனான போட்டிகள் என்றாலே கொத்து, கொத்தாக விக்கெட்டுகள் எடுக்கும் முகமது சிராஜ், இந்த தொடரில் முழுமையாக தடுமாறி விட்டார். 3 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் ரன்களையும் அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டார். அர்தீப் சிங்கும் 2 போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே எடுத்து ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தார்.

ஒருபக்கம் இலங்கை ஸ்பின்னர்கள் இந்திய விக்கெட்டுகளை கொத்து கொத்தாக அள்ள, நமது ஸ்பின்னர்கள் தங்களது தரத்துக்கு ஏற்ப பந்துவீசவில்லை. குல்தீப் யாதவ்வின் (3 போட்டிகளில் 4 விக்கெட்) வழக்கமான மேஜிக் ஸ்பெஷல் இந்த தொடரில் மிஸ் ஆகி விட்டது. வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் பவுலிங்கில் இன்னும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும்.

ஷிவம் துபேவுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு ஏன்?

இதேபோல் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த சில தவறான முடிவுகளும் தோல்விக்கு வித்திட்டுள்ளது. ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஸ்விப் ஷாட் விளையாடும் ரிஷப் பண்ட்டுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே வேளையில் கொஞ்சம் கூட ஃபுட்வொர்க் (கால்களை நகர்த்தி ஆடுதல்) இல்லாமல் விளையாடும் ஷிவம் துபேவுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய ரியான் பராக்குக்கும் கடைசி போட்டியில்தான் வாய்ப்பு கிடைத்தது. இவர் கடைசி போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் மெச்சும்படி செயல்படவில்லை. டி20 தொடரில் வெற்றி பெற்று விட்டதால் ஒருநாள் தொடரிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நினைத்த இந்திய வீரர்கள் மெத்தனமாக செயல்பட்டு தோல்வியை பரிசாக பெற்று விட்டனர். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முதல் ஒருநாள் தொடரே தோல்வியில் முடிந்து விட்டது. தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய்ந்து தவறுகளை சரி செய்ய கவுதம் கம்பீர்  மற்றும் கேப்டன் ரோகித் சர்மா கூட்டணிக்கு நேரம் வந்து விட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow