Govt Employees Can Join RSS Organization : நமது நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்பிறகு நன்னடத்தை விதிமுறைகள் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது. இதற்கிடையே 1966ம் ஆண்டு பசுவதைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.
இதனால் டெல்லியில் வன்முறை வெடித்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். டெல்லியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லத்துக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரவும், அந்த அமைப்பினரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அதிரடியாக தடை விதித்தார். இந்நிலையில், அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில், நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஆர்எஸ்எஸ்(RSS) அமைப்பு மீதான 58 ஆண்டு தடையை மத்திய அரசு(Central Govt) நீக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ''அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. எதற்காக நீண்டகாலம் இருந்த தடையை நீக்கினார்கள். மத்திய அரசின் அறிவிப்பு மக்களுக்கு எதிரானது'' என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள காங்கிரஸ் எம்பி சசிதரூர், ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு எந்த அமைப்பில் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அனைவருக்கும் பணியாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அரசு ஊழியர்கள் தனி ஒரு அமைப்பில் இணைவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது'' என்று தெரிவித்தார்.
இதேபோல் மத்திய அரசின் அறிவிப்பு நாடு முழுவதும் நெட்டின்சன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். ''கடந்த 99 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நமது நாட்டை கட்டமைக்கவும், சமூக சேவையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் பங்கேற்க எந்தவித ஆதாரமும் இன்றி அப்போதைய அரசு தடை விதித்தது. இப்போது தடை நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறி வருகின்றனர்.