சென்னையைச் சேர்ந்த மேரி ஜெனட் டெய்சி என்பவர் ஆவடி சைபர் க்ரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த சங்கீதா உள்ளிட்டோர் மீது டிஜிட்டல் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
போலீஸ்தரப்பில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக நாடு முழுவதும் மனுதாரரின் வங்கி கணக்கிற்கு தொடர்புடைய சுமார் 71க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பண மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் மீது இதே போன்ற குற்றவழக்குகள் தமிழ்நாட்டிலும், கேராளாவிலும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், குறுக்கிட்டு பேசிய வழக்கறிஞர், இந்த வழக்கில் சங்கீதா ஓய்வு பெற்ற முன்னாள் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணிக்குமாருக்கு உறவினர் என்றும், அதனால் தான் காவல்துறையினர் இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி இந்த நீதிமன்றம் வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும், எந்தவிதமான பாரபட்சமும் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 10தேதிக்கு ஒத்திவைத்தார்.