Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!
Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court Order on NEET Exam: 2024ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாகவும், வழக்கத்தை விட அதிகமாக 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. மருத்துவ படிப்பிற்காக மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளே போதுமானது என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீட் முறைகேடு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், மறுதேர்வு நடத்த முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தது. மேலும், நீட் முறைகேடு பரவலாக நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற IIT மெட்ராசின் அறிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
தேர்வுத் தாள்களை ஏப்ரல் 28ம் தேதி NTA அனுப்பிய நிலையில், ப்ரைவேட் கொரியர் கம்பெனி ஜார்கண்ட்டில் 6 நாட்களாக வைத்திருந்ததாகவும், அதனை இ-ரிக்ஷா ஓட்டுநர் மே 4ம் தேதி ஹசாரிபர்க் பள்ளிக்கு எடுத்துச் சென்றதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இ-ரிக்ஷா ஓட்டுநர் வழங்கிய தேர்வுத்தாள்களை, CBI கைது செய்த பள்ளி முதல்வர் பெற்றதாக ஆதாரங்களுடன் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. இந்நிலையில் இருதரப்பின் பரபரப்பு வாதங்களை உச்சநீதிமன்றம் கேட்டறிந்தது.
இதையடுத்து நகர வாரியாக, தேர்வு மையம் வாரியாக முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை (ஜூலை 20) மதியம் 12 மணிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு முடிவுகளில் மாணவர்களின் அடையாளத்தை மறைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மறு தேர்வு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நீட் இளங்கலை தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முன்னதாக நீட் இளநிலை தேர்வு வினாத்தாள் கசிந்த காரணத்தினால், முதுநிலைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது. எம் டி,, எம் எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு, ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?