’நான் அப்பவே சொன்னேன்.. கெஜ்ரிவால் கேட்கவில்லை’.. அன்னா ஹசாரே பேச்சு!
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் , திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவாலை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இதனால் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதாவது ரூ.10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று கூறி இரண்டு அமர்வு கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கினார்கள். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததால் ஆம் ஆத்மி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன்பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘’இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எனது வழக்கில் நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். ஆனால் நிரபராதி என மக்கள் தீர்ப்பு அளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் நான் அமரப்போவதில்லை. வரும் பிப்ரவரி மாதம் டெல்லிக்கு தேர்தல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா தேர்தலுடன் சேர்த்து டெல்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். டெல்லியில் ஒவ்வொரு தெருக்களுக்கும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு நான் முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ் ஆகும்’’ என்று கூறியிருந்தார்.
கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நாடகமாடுவதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், ‘அரசியலுக்கு நுழைய வேண்டாம் என்ற எனது பேச்சை கெஜ்ரிவால் கேட்கவில்லை’ என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘’அரசியலுக்கு நுழைய வேண்டாம் என்று கெஜ்ரிவாலிடம் ஏற்கெனவே கூறினேன். சமூக சேவையில் இருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று தொடக்கம் முதலே அவரிடம் கூறி வருகிறேன். ஆனால் கெஜ்ரிவால் எனது பேச்சை கேட்கவில்லை. இப்போது நடந்திருப்பதை தவிர்க்க முடியாது. கெஜ்ரிவால் மனதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவரை அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்து இருந்தார். ‘’கெஜ்ரிவால் கைதால் விரக்தியில் உள்ளேன். என்னுடன் மதுவுக்கு எதிராக போராடிய அவர் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதானது துரதிருஷ்டவசமானது’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?