Wayanad landslide: தோண்டத் தோண்ட உடல்கள்.. எங்கும் அழுகுரல்.. கனமழைக்கு இடையே மீட்புப்பணி!

Wayanad Landslide Rescue Operation : வயநாட்டில் தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Jul 31, 2024 - 21:09
Aug 1, 2024 - 10:30
 0
Wayanad landslide: தோண்டத் தோண்ட உடல்கள்.. எங்கும் அழுகுரல்.. கனமழைக்கு இடையே மீட்புப்பணி!
Wayanad Landslide Rescue Operation

Wayanad Landslide Rescue Operation : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என அனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன. 

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதையுண்டும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 256 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அங்கு தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்ததால் அந்த பகுதி முழுவதும் மக்களின் அழகுரல்களால் மயானமாக உள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்தவுடன் தமிழ்நாடு அரசு முதல் ஆளாக உதவிக்கு ஓடியது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் வயநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதேபோல் கேரளாவுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

''அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர். 

அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதாவது கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கு 67319 948232ல் நிதியுதவி வழங்கலாம். Keralacmdrf@sbi என்ற கூகுள் பே கணக்கிலும் நிதியுதவி அளிக்கலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. 

நிவாரண நிதி அனுப்ப வேண்டிய வங்கி கணக்கின் முழுமையான விவரம் பின்வருமாறு:-

Account Number: 67319948232
Name: Chief Minister’s Distress Relief Fund
Bank: State Bank of India
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC: SBIN0070028
SWIFT CODE: SBININBBTOB
Account Type: Savings
PAN: AAAGD0584M

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow