'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

Jul 14, 2024 - 10:27
 0
'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி
modi condemned trump attack

டெல்லி: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

இதற்காக டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார். 

பாதுகாப்பு படையினர் உடனடியாக காதில் ரத்தம் வழிந்த டிரம்ப்பை கேடயம்போல் சூழ்ந்து அவரது உயிரை பாதுகாத்தனர். அவரை உடனடியாக அங்கு இருந்து அழைத்து சென்றனர். டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் குடியரசு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது.

டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிபர் ஜோ பைடன் டிரம்பிடம் போனில் பேசி நலம் விசாரித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ மற்றும் பட்லர் மேயர் பாப் டான்டோய் ஆகியோரிடம் அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்துள்ளார்.

டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கண்டனம் தெரிவித்துள்ளார். ''பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து துறைகளும் பென்சில்வேனியா சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. நமது ஜனநாயகத்தில் ஒருபோதும் வன்முறைக்கு இடமில்லை. டிரம்ப் பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டிரம்புக்காகவும், மற்றவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்'' என்று லாய்ட் ஆஸ்டின் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியும், டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எனது நண்பர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எனது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்துடன் உள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow