பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில் குறிப்பாக இந்திய வீரர்கள் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான 200 மீட்டர் டி35 தடகள போட்டியில் பிரீத்தி பால் 30.1 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 தடகள போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
2 வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ள பிரீத்தி பாலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன் ஈடு இணையில்லா வெற்றியை பிரீத்தி பெற்றிருப்பதாகவும், அவர் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, செல்போனம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, வரலாற்று சாதனை படைத்திருப்பதாக குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பிரீத்தி பால் இந்திய மக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளார் என்றும் அவருடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T47 போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதன்மூலம் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வேட்டையாடி வரும் இந்தியா பதக்கப்பட்டியலில் 27வது இடத்தை பிடித்துள்ளது.
பதக்கப்பட்டியலில் சீனா 33 தங்கம் உள்பட 71 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கிரேட் பிரிட்டன் 23 தங்கம் உள்பட 43 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்த்துள்ளது. அமெரிக்கா 8 தங்கம், 11 வெள்ளி உள்பட 27 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக 4வது இடத்தில் உள்ள பிரேசில் அதே 8 தங்கம் உள்பட 27 பதக்கங்களை வென்றபோதும், 4 வெள்ளியை வென்றிருப்பதால் நான்காம் இடத்தில் உள்ளது. 5ஆம் இடத்தில் உள்ள பிரான்ஸ் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது.
நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கத்தை ஒப்பிடுகையில், பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சிறப்புடன் செயலாற்றி வரும் வேளையில், 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 27வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.